Monday, March 21, 2011

பெரியாரின் பொன்மொழிகள்

"சுயமரியாதை அற்ற தன்மைதான் நம்மைச் சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பகுத்தறிவிலும் கீழ்மைப்படுத்தி இருக்கிறது." - தோழர் ஈ.வெ.ரா, ('விடுதலை', 10.05.1941)
கடவுள் ஆதி இல்லாதது, அர்த்தமில்லாதது, உருவமில்லாதது, அது இல்லாதது, இது இல்லாதது, புரியப்பட்ட, அறியப்பட்ட சங்கதி எதுவும் இல்லாதது" என அடுக்கிக் கொண்டே போய், அப்படிப்பட்ட ஒன்று இருப்பதாக அல்லது இருக்கும் என்பதாக அல்லது இருந்துதானே தீரவேண்டும் என்பதாக அல்லது இருக்கின்றதாக எண்ணிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்பதாகச் சொல்லிவிடுகிறார்கள். -[பெரியார், 30.01.1938 ]

முன்னோர் சொன்னார் என்று சொல்வது முட்டாள்தனம். அவர்கள் காட்டுமிராண்டிகள். அறிவாளிகள் என்று சொல்ல வேண்டுமானால் முன்னோர்களைவிட இன்றைய அறிவாளிகள்தான் மேல். இன்றைய அறிவாளிகளைவிட நாளை வரப்போகும் அறிவாளிகள் இன்னும் மேலானவர்களாக இருப்பார்கள். நம்முடைய பாட்டன், பூட்டன் காலத்துக்கும், இன்றைக்கும் எவ்வளவோ மாறுதல் அடைந்து இருக்கின்றோம். 2000, 3000- ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் எப்படி இருந்து இருப்பார்கள்? அது காட்டுமிராண்டிக் காலம் அல்லவா? அந்தக் காலத்து அறிவாளிகள் மூளையில் உதித்தக் கருத்துகள் இன்றைய நிலைக்கு எப்படிப் பொருந்தும்?
-[பெரியார், 02.02.1961]

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது.

இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்ன இன்னது செய்வதாக நேர்ந்துகொள்வது, ஜீவப் பலி கொடுப்பது, கோவில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப் படுவனவாகும். ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறு பெயர் சொல்ல வேண்டுமானால் ‘பேராசை’ என்றுதான் சொல்லவேண்டும். பேராசை என்றால் தகுதிக்குமேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்.

- [பெரியார், "பகுத்தறிவு" மலர் 1, இதழ் 9, 1935 ]

இன்று ஆகாய கப்பல்களும், கம்பியில்லா தந்தியும், ரேடியோவும் வந்து நம்மை அதிசயப்படுத்துகிற சமயத்தில், நாம் தேர் திருவிழாவும் கும்பாபிஷேகமும் செய்கிறோம். 20-மணி நேரத்தில் அமெரிக்கா போகிறான். ஆனால், நாம் கட்டை வண்டி கட்டிக் கொண்டு பிரயாணம் செய்கிறோம்.

இன்று நமக்கு இவற்றின் பேரால் அறிவு மட்டும் கெட்டுப் போவதில்லை. ஏராளமான பணமும் பாழ் செலவு செய்யப்படுகிறது. எவ்வளவு பணம் இந்த கடவுள்களால்
வரும்படி வருகிறதெனப் பாருங்கள். திருப்பதி கோவிலுக்கு ஒரு வருடத்திற்கு 40-லட்சம் ரூபாய் வரும்படி இதையெல்லாம் அனுபவிப்பவர்கள் யார்? மதுரை
கோவிலுக்கு 7, 5-லட்ச ரூபாய் வரும்படி; இதையெல்லாம் யார் உண்டு கொழுக்கிறார்கள்? சிறீங்கத்துக்கு 10-லட்சம் ரூபாய் வரும்படி. இதையெல்லாம் யார் மோசடி செய்கிறார்கள்? இவை மக்களுடைய முன்னேற்றத்திற்கு
உபயோகப்படுத்தப்படுகிறதா? பின் எங்கே போகிறது? பாழும் மதில்களைக் கட்டுவதற்குச் செலவு செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் தொந்தி நிரம்புகிறது.
இந்தப் பாழாய்ப் போகும் பணத்தில் ஒரு பகுதியை மக்கள் முன்னேற்றத்திற்காக விஞ்ஞான ஸ்தாபனங்கள் ஏற்படுத்த, அறிவு ஊட்டும் அலுவலகங்களைச் செய்யும்படி செய்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும்

பகுத்தறிவுக்கு மதிப்பு கொடுப்பவர்கள் கேள்வி மாத்திரத்திலேயே ஒன்றை நம்பிவிடக்கூடாது. எழுதி வைத்திருப்பதாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. வெகுகாலமாக நடந்து வருவதாகத் தெரிவதனாலேயே ஒன்றை நம்பிவிடக் கூடாது. அநேகர் பின்பற்றுவதாலேயே நம்பிவிடக் கூடாது. கடவுளாலோ, மகாத்மாவாலோ சொல்லப்பட்டது என்பதாலே நம்பிவிடக் கூடாது. ஏதாவது ஒன்று நம்முடைய புத்திக்கு ஆச்சரியமாய்த் தோன்றுவதாலேயே அதைத் தெய்வீகம் என்றோ; மந்திர சக்தி என்றோ நம்பிவிடக் கூடாது. எப்படிப்பட்டதானாலும் நடுநிலைமையிலிருந்து பகுத்தறிவுக்குத் தாராளமாய் மனம் விட்டு ஆலோசிக்கத் தயாராயிருக்க வேண்டும்."
(பெரியார் , ´குடிஅரசு´ 09.12.1928)

இன்றைக்கு 200-ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா என்ற பெயரோ, இந்துக்கள் என்றபெயரோ, எங்காவது வழங்கப்பட்டிருந்ததாக உங்களில் யாராவது கூறமுடியுமா?
கூறமுடியுமானால் அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங்களிலோ ஒரே ஓர் ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றி யறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே!
- [குடிஅரசு, 08.05.1948]

இந்தியன் ஒருவன் மலங்கழிக்கவிருந்தால் தண்ணீர் விட்டு தேய்த்துக் கழுவதுதான் சுத்தமாகக் கருதப்படும். ஆனால் ஒர் வெள்ளைக்காரன் மேல்நாட்டில் மலங்கழித்தால், காகிதத்தை வைத்து துடைப்பதுதான் சுத்தமெனக் கருதப்படும். அவன் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்திக் கொள்வதற்குச் சிறிதும் இயலாது. காரணம் அவனுடைய தேசத்தின் சீதோஷ்ணம் மிகவும் குளிர்ச்சி. அதுவுமன்னியில் அவனுடைய உடை தண்ணீர் விட்டுசுத்தப்படுத்துவதற்கு இடங்கொடுக்காத நிலையில் ஓர் தடையாகவுமிருக்கிறது. ஒவ்வொரு காரியமும் இடத்திற்குத் தகுந்தபடி, தேசவர்த்தமானத்திற்குத் தக்கபடி நடை நடைபெறுமேயல்லாமல் வேறல்ல.
அதைப்போலவே மதமும் கால, தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடிஏற்படுத்தப்பட்டது. அந்த மதம் இப்பொழுதுள்ள கால, தேச, வர்த்தமானத்திற்கு அவசியமா? அல்லது அதை சீர்திருத்த வேண்டுமாவென்பதை ஆராய்ந்து தக்கன செய்ய வேண்டுமெயல்லாது அது எங்கள் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. அதைஒன்றுஞ் செய்துவிடக் கூடாது என்று சொல்லுவது அறிவுக்குப் பொருத்தமுடையதாகத் தெரியவில்லை.
- (திருநெல்வேலி மாவட்டம் சுயமரியாதைத் தொண்டர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது. 27.07.1929- "திராவிடன்" இதழில் வெளியானது)

ஓர் அரக்கன் வேதத்தைத் தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான். அந்த அரக்கனைக் கொன்று வேதத்தை மீட்டுத் தந்தான் என்று எழுதியிருக்கிறான்.
வேதத்தை எப்படி தூக்கிக் கொண்டு போனான்? இன்று இருப்பதுபோல் தூக்கிப் போகக் கூடிய பொருளாக - ஒரு புத்தகமாக - அந்தக் காலத்தில் - வேதம் இருக்கவில்லை; ஒலி வடிவமாகத்தான் அதாவது மனப்பாடம் செய்துவைத்து
உச்சரிப்பதாகத்தான் இருந்தது. அதை எப்படித் தூக்கிக் கொண்டு போகமுடியும்? அப்படியே தூக்கிக் கொண்டு போய்க் கடலில் ஒளிந்து கொண்டான் என்றால் எவ்வளவு நேரம் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியும்?

[14.10.1957-அன்று சென்னை வண்ணாரப் பேட்டையில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு]

உலகம் விஞ்ஞானத்தில் (அறிவியலில்) தலை சிறந்து அற்புத-அதிசயங்களைக் கண்டுப்பிடித்து போட்டிப்போட்டுக் கொண்டு முன்னேறுகிறது. ஆகாயத்திலே சந்திரமண்டலம் வரையில் மனிதன் பறந்துச் சென்று வருகிறான். தந்தி பறக்குது. அமெரிக்காவிலே பேசினால் இங்கே கேட்குது. கேட்பது மட்டுமல்ல. பேசுகின்ற மனிதனையும் நாம் நேரே பார்க்கலாம் டெலிவிஷன் மூலம்!

இத்தகைய அதிசயங்களை எல்லாம் கண்டுப் பிடித்து ஆராய்ந்து முன்னேறும் போது நாம் என்னடாவென்றால் சுத்தக் காட்டு மிராண்டிகளாக மாட்டையும், கழுதையையும், குரங்கையும், கல்லையும், கடவுள் என்றும் அந்த சாமிக்கு கல்யாணம், எத்தனை பிள்ளை, அதற்கு இத்தனை பூசை செய்தால் மோட்சம் என்று ஆராயும் முட்டாள்தனமான காரியத்தில் உச்சநிலையில் இருக்கிறோம்.

குழவிக்கல் சாமி. அதற்கு தினம் ஆறு வேளை-12 வேளை சோறு. வருஷா வருஷம் கல்யாணம். இதுவும் பத்தாமல் வைப்பாட்டி வேறு. அதற்குக் கருமாதி வேறு! நகை, கோயில் இப்படி அனேகம் செய்கிறோம். இதைப் பற்றியெல்லாம் ஒருவராவது சிந்திப்பது இல்லை. மனிதனுக்கு உள்ள ஆறாவது அறிவை எவனும் உபயோகப்படுத்துவதே இல்லை.

(14-06-1962 அன்று வல்லம் படுகையில் நடைப்பெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை" 23-06-1962 , 24-06-1962 , 25-06-1962)

பகுத்தறிவு என்று சொல்லுவதும்
மாறி மாறி வருவதாகும்.
இன்று நாம் எவை எவைகளை
அறிவுக்குப் பொருத்தமானவை என்று
எண்ணுகிறோமோ அவை அவை நாளைக்கு
மூடப் பழக்கங்கள் எனத் தள்ளப்படும்.
நாம் கூட பல பொருள்களை, ஏன் மகான்கள்
என்று புகழப்படுபவர்கள்! சொன்னவற்றையே
ஒதுக்கி விடுவோம். அதுப்போல் தான்
நமது பின்னோர்கள் என்னைக் குறித்துங்கூட
ஒரு காலத்தில் "ராமசாமி என்ற மூடக்
கொள்கைக்காரன் இருந்தான்" என்று கூறலாம்.
அது இயற்கை. மாற்றத்தின் அறிகுறி!
காலத்தின் சின்னம்.

பழைய காலத்தைச் சேர்ந்தவை
என்பதற்காக நாம் குறை கூறவில்லை.
அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி
என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும்.
சிக்கிமுக்கிக் கல்லினால் முதலில் நெருப்பை
உண்டாகக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்!"
அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்போது
மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்.
எனவே மாற்றம் இயற்கையானது.
அதைத் தடுக்க யாராலும் முடியாது.
எத்தகைய வைதீகமும் மாற்றத்திற்குள்ளாகி
தான் தீர வேண்டும்.

- பெரியார்

ஒரு முழக் குழக்கவில்லை ஒரு டன் எடையுள்ள தேர் மீது ஏற்றி வைத்து, ஆயிரம் பேரை விட்டு இழுக்கச் சொன்னால் 1-மணிக்கு அது 4-மைல் நகருவதே பெரும் கஷ்டம். போலீஸ்காரன் இடுப்பு பெல்டைக் கழற்றி வெளுத்து வாங்குவான்! மணிக்கு 800-மைல் பறக்கிற ஆகாயவிமான காலத்திலே நம்ம கடவுள் நிலைமை இப்படி இருக்கிறது என்றால் நம்மை விடக்காட்டுமிராண்டிகள் வேறு யார் இருக்க முடியும்? - [பெரியார், 25-03-1959]

குழவிக்கல்லை வணங்காத நாட்டில் தான்...
பார்ப்பான், பறையன் இல்லாத நாட்டில்தான்...
ஆகாய விமானம், ரயில், மோட்டார், அணுக்குண்டு, ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடித்தார்கள்.
இங்கு நாம் மேல் ஏழு, கீழ் ஏழு என்று 'லோகங்களை'க் கண்டு பிடித்ததைத்தவிர ஒரு குண்டூசியாவது செய்தோமா?
- [பெரியார், 02.04.1950]

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தப் பிரார்த்தனையின் அஸ்திவாரம், உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வமும் அறிவும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால் ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமானவைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கின்றது.
- [பெரியார், "பகுத்தறிவு" மலர் 1, 1935 ]

உன் இலக்கியத்தையே பார்த்து கிட்டே இருந்தால் நீ என்றைக்கு ஆகாயத்திலே பறக்கப் போகிறே? பறக்கிறதுக்கு எங்கே இருக்கிறது சரக்கு உன் இலக்கியத்திலே? கண்ட சரக்கு என்னான்னா - சூரியன் அங்கே ஓடினான், இங்கே ஓடினான் - அவளுக்குப் பிள்ளை கொடுத்தான், இவளுக்குப் பிள்ளை கொடுத்தான் - அவன் ஏழு குதிரையிலே போகிறான் - இந்த மாதிரி கதைதானே உனக்குத் தெரியும். அதுதான் உனக்குத் தெரிந்த இலக்கியம். இதுதான் பள்ளியிலேயும் சொல்லித்தருகிறார்கள். இதைத்தான் விரிவாக இலக்கியத்திலேயே படிக்கிறாய்.
- [பெரியார் , 05.03.1969]

பூகோளம் தெரியுமா உனக்கு? சரித்திரம் தெரியுமா உனக்கு?
உன் இரத்தம் கொண்டவர் தமிழ்மக்கள் இலங்கையில் நாய்போலத் திண்டாடுகிறார்கள். அதைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப் பட்டதுண்டா?
-[பெரியார், 30.11.1957, எழும்பூர் பெரியார் திடலில் நடைபெற்ற சொற்பொழிவு]

"கடவுளைக் குற்றம் சொல்லுகின்றான் இவன்" என்று எவன் நினைக்கின்றானோ அவனை விட மடையன் எவனுமிருக்கமாட்டான்.
அவனின்றி அணுவும் அசையாது என்கின்ற போது, கடவுள் சொல்லித்தான் நான் செருப்பாலடிக்கின்றேன் என்று நம்ப வேண்டுமே ஒழிய, நானாகச் செய்கின்றேன் என்று நம்பக்கூடாதே. அப்படி நம்புவதே கடவுள் நம்பிக்கையற்ற செயல்தானே. - பெரியார்

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
- [பெரியார், 15-2-1973]

என்னுடைய நோக்கமெல்லாம் சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் அநாகரிகப் பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாற்றப்பட வேண்டும். பழங்கால அநாகரிகத்துக்கேற்றபடி புகுத்தப்பட்டுள்ள மூடநம்பிக்கைகள் அழிந்து புதியதொரு சமுதாயத்தை உருவாக்கி அதனிடத்தில் மனிதப் பண்பும், பகுத்தறிவும் நாகரிகம் மிளிரச் செய்ய வேண்டும் என்பதே ஆகும். -[பெரியார், 09.01.1956]

சிலர் கம்ப இராமாயணத்தைத் கலையென்ற சாக்கைச் சொல்லி எரிக்கக் கூடாதென்கிறார்கள். அதை ஒரு கலையென்று இராமாயணம் பாடிய கம்பரே ஒப்புக்கொள்ளவில்லை.
"வையம் என்னை இகழவும்,
மாசெனக்கு யெய்தவும்
இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்வி புலமையினோர்
புகல்தெய்வமாக் கவி மாட்சி தெரிவிக்கவே"
என்பதால், வெள்ளையாகச் சொல்லுகிறார். அப்படி இருக்க இதைக் கலையென்பது எவ்வளவு மதியீனமாகும்.
- [பெரியார்,´இளைஞர்களுக்கு அழைப்பு´ என்னும் நூலில் இருந்து - பக்கம்:10]

"மதம் இருக்க வேண்டியதுதான். சாட்சாத் இறைவனால் உண்டாக்கப்பெற்ற இந்துமதத்தின் மகத்துவமே மகத்துவம்! பார்ப்பனர்கள்தான் அவதார புருஷர்கள்,கடவுளுக்கு அடுத்தபடியான அம்சம் கொண்டவர்கள். இந்த உண்மைகளை நேற்று இரவுதான் என் கனவில் தோன்றி அம்பாள் கூறினாள்"
என்று ஒரு வார்த்தை கூறினால்போதும்! உடனே நான் 'மகாத்மா' ஆகக்கூடும்! மகாத்மாவென்ன ஈ.வெ.ராமசாமி தான் விஷ்ணுவின் 10-வது அவதாரம் என்று கூறுவர். என்னுடைய உருவப்படம் ஒவ்வொரு பார்ப்பனர் வீட்டின் முன்னிலைகளிலெல்லாம் தொங்கும். நிதம் நிதம் மலர் சூட்டி சாம்பிராணி புகைகாட்டி பால்பழம் வைத்து நைவேத்யம் செய்வார்கள். அரசாங்கமே நான் சொல்லியதைப் பார்த்து "விட்டது சனியன்" என்று நிம்மதியாக எந்தப் பித்தலாட்டத்தையும் இனிமேல் செய்யலாம் என்று திட்டமிடும்.
"ஒருவன்தான் பெரும் எதிரியாக இருந்தான்; இன்று முதல் விமோசனம் கிடைத்தது" என்றெண்ணி மகிழ்வர்.
- [பெரியார், 06.03.1955]

உலகம் எல்லாம் விழிப்பு எய்தி விட்டது. தினம் தினம் அதிசய அற்புதங்களைக் கண்டும், அனுபவித்தும் வருகின்றோம். 3000-ஆண்டுகளாகக் கடவுள் இருக்கிறது என்றாலும், இந்த 3000- ஆண்டுகளில் கடவுள் இந்த அதிசயங்களில் ஒன்றைக் கூடக் கண்டுபிடிக்கவில்லை. இந்த மைக் - எலக்ட்ரிக் லைட்களை (மின் விளக்கு) மனிதன்தானே கண்டுபிடித்தான்?
கேட்டால் கூறுவார்கள். "எல்லாம் சும்மாவா! கடவுள் செயல்தான் - கடவுள்தான் மனிதன் மூலம் செய்தது" என்று! ஏன் இந்த 3000-ஆண்டில் அதைச் செய்தால் என்ன? இப்போது ஏன் என்று கேட்டால் நீ நாஸ்திகன் என்று கூறிவிடுவார்கள்.
-[பெரியார், 30.06.1961]

ஒரு மனிதன், தான் சாப்பிடும் ஆகாரத்தை மற்றொருவன் கண்ணாலே பார்த்து விட்ட மாத்திரத்திலேயே அந்த ஆகாரம் மற்றொரு மனிதனுக்குச் சாப்பிட முடியாதபடி தோஷம் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிற ஒரு கூட்டத்தால் ஆதிக்கம் செலுத்தும் நாட்டில் அம்மக்கள் கையில் சுந்திரத்தைக் கொடுத்தால் அந்தச் சுதந்திரம் மற்ற மக்களுக்கு எப்படிப் பயன்படும்? -[பெரியார், 25.01.1947]

ஆண்சாமி, பெண்சாமி, பெண்டாட்டிசாமி, தறுதலைச்சாமி, கல்லுச்சாமி, மண்ணுச்சாமி, கட்டைச்சாமி, செம்புச்சாமி, பொம்மைச்சாமி, வீட்டுச்சாமி, காட்டுச்சாமி, ஆற்றுச்சாமி, மயிலேறுஞ்சாமி, குயிலேறுஞ்சாமி, மாடேறுஞ்சாமி, ஆடேறுஞ்சாமி, எலியேறுஞ்சாமி, புலியேறுஞ்சாமி, கழுகேறுஞ்சாமி, குரங்கேறுஞ்சாமி, ஆனைமுகச்சாமி, ஆமைமுகச்சாமி, பன்றிமுகச்சாமி, பாம்புமுகச்சாமி, எலிமுகச்சாமி, புலிமுகச்சாமி, சிங்கமுகச்சாமி, சிறுத்தைமுகச்சாமி, கொல்லைப் பிடாரி, எல்லைப் பிடாரி, குழமாயி, குழந்தையாயி, அங்கம்மன், அங்காளம்மன், மூக்கம்மன், மூத்தாளம்மன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், ஜக்கம்மன், தீப்பம்மன், தீப்பாச்சியம்மன், சாமூண்டியம்மன், சரவேரியம்மன், வள்ளியம்மன், தெய்வானை, காமாஷி, விசாரலாட்சி, பேச்சியாயி, லட்சுமி, ஆண்டாள் முதலிய அம்மாமார்களும், சிவன், நாராயணன், பிரம்மன், முருகன், அய்யனார், ஆஞ்சிநேயர், காட்டான், மாடன், காட்டேரி, கருப்பண்ணன், முனீஸ்வரன், இருளன், பேயாண்டி, பெரியண்ணன், சின்னண்ணன், காத்தவராயன், மதுரைவீரன், வீரியன், நொண்டி, தூரி, தூண்டி, நல்லண்ணன், தொட்டியத்து சின்னான், மன்னாரு, பனைமரத்தான், நாட்ராயன் முதலிய அய்யாமார்களும், நமது நாட்டைவிட்டு என்று தொலைவார்களோ அன்றே நமது நாடு விடுதலையடையும் நிச்சயம். நிச்சயம்!
-[பெரியார், 23.06.1945, "குடிஅரசு"]

திதி என்றால் என்ன? மேல் உலகத்தில் இருப்பவர்களுக்கு இங்கிருந்து உணவு அனுப்புவதுதானே! சில மந்திரங்களைச் சொல்லி நம்மீது பூணூல் மாட்டி நம்மை மேல் சாதியாக்கிச் சடங்குகளைச் செய்வான். கடைசியில் மறுபடியும் பூணூலைக் கழற்றிக் கொண்டு தானே போகிறான்? இதன் தத்துவம் என்ன?
தமிழர்களுக்குத் திருமணம் செய்து கொள்ளவோ, திதி நடத்தவோ தகுதி கிடையாது என்பதுதானே?
இந்த மாதிரியாகப் பூணூலைப் போட்டுக் கொண்டு திருமணம் புரிந்ததாகவோ, திதி கொடுத்ததாகவோ தமிழர் இலக்கியத்தில் இருப்பதாகக் காட்ட முடியுமா?
- [பெரியார், 09.11.1959]

யார் என்ன சொன்னாலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாயுள்ள ஹிந்து மதத்தை அசைக்க எவராலும் முடியாது. எத்தனையோ எதிர்ப்புகளையும், கஷ்டங்களையும் சமாளித்துக் கொண்டு உயிரோடிருக்கிறது நமது ஹிந்து மதம் என்று சர்.ராதாகிருஷ்ணன் போன்ற மேதாவிகள் (?) கூறலாம். உயிரோடிருப்பதனால் மட்டும் ஒரு விஷயம் உயர்வானதாய் விடுமா? எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையே எலி, கொசு,ஈ, தேள், பாம்பு, மூட்டைப் பூச்சிகள் கூடத்தான் உயிரோடிருக்கின்றன.
மனித சமூதாயமே எதிர்த்து வரும் குடி, விபசாரம் கூடத்தான் உயிரோடிருக்கின்றன? இவையெல்லாம் இந்து மதத்தை விடப் புனிதமானவைகளா? அதிகப் பலன் தரக் கூடியவைகளா? என்று கேட்கிறோம்
-[பெரியார், 10.01.1947, "விடுதலை"யில் எழுதிய தலையங்கம்]

"இந்தக் காலத்து இளைஞர்கள் மனம் என்மீது வெறுப்புக் கொள்ளாது; வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட, நான் அதற்கு அஞ்சவில்லை. இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்; பாராட்டாவிட்டாலும், இன்று நான் சொன்னதைப் பின்பற்றி வீரத்தோடு, மானவாழ்வு வாழும் வழியில் இருப்பார்கள். சரியாகவோ, தப்பாகவோ, நான் அதில் உறுதி கொண்டிருப்பதால் எனக்கு எக்கேடு வருவதானாலும், மனக் குறையின்றி, நிறை மனதுடன் அனுபவிப்பேன் - சாவேன் என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்."
- [பெரியார், தமிழர் தலைவர் - நூல், பக்கம்:15]

"நல்லநாள், கெட்டநாள், பண்டிகை கொண்டாடுவதெல்லாம் எதற்காக? மதத்தாலே ஏற்பட்ட சாதியை புராணத்தால் புகுத்தப்பட்ட சாதியை ஒவ்வொருவர் உள்ளத்திலும் திரும்பத் திரும்ப ஞாபகத்தில் கொண்டு வருவதற்குத் தனித்தனியாகப் பிரசாரம் செய்வதற்குப் பதிலாக, பண்டிகைகள், நல்ல நாள், கெட்ட நாள், மூலம் பிரசாரம் செய்வதே தவிர, அதனால் எந்தவிதப் பலனும் இருப்பதாகக் கூறமுடியுமா?"
- பெரியார்

இராமாயணம் கடவுள் புராணமாகும். பெரிய புராணம் பக்தர்கள் புராணமாகும். இவை இரண்டிலும் அவற்றிலுள்ள விஷயங்களிலிருந்து மக்கள் அறிந்து அனுபவத்தில்அறிந்துகொள்ளக்கூடிய காரியங்கள் எதுவும் இருப்பதாகச் சுலபத்தில் சொல்லிவிட முடியாது. ஒழுக்கக்கேடு, விபசாரம் சுயமரியாதையற்ற தன்மை காட்டுமிராண்டித்தன்மை ஆகியவையே மலிந்து கிடக்கின்றன.
இப்படிப்பட்டவற்றைத் தெய்வீக நூல்களென்றோ, அருங்கலைகள் என்றோ, கொண்டாடுவோமேயானால் நாம் இன்னும் எவ்வளவு அநாகரிகக் காட்டுமிராண்டித் தன்மையில் வாழ்கிறோம் - நிலையில் இருக்கிறோம் என்பது புலனாகவில்லையா என்று கேட்கிறேன்.
- [பெரியார, 21.02.1943]

இன்றைய தினம் நாத்திகன் என்ற பதத்திற்குக் கடவுளை இல்லையென்பவன் என்றாக்கிவிட்டார்கள். தர்க்க ரீதியில் புத்தியை உபயோகப்படுத்தி விஷயத்தை ஆராய்ச்சி செய்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் நாத்திகன்தான். அதாவது சொந்த புத்தியைக் கொண்டு வேத சாஸ்திரங்களைத் தர்க்கம் செயபவன் நாத்திகன். அப்படிப் புத்தியை உபயோகப்படுத்துகிறவன்தான் புத்தன். 

மனிதன் இங்கே படிக்க வரவேண்டுமென்கிறவன் அறிவு பெறுவதற்காகப் படிக்க வருகிறானா? இல்லை அறிவைப் பாழாக்க புராணங்களையும் கடவுள் கதைகளையும் தெரிந்து கொள்ள வருகின்றானா? அதற்கு அவனைத் தெருவிலே விட்டாலே தானே வந்து விடுமே அது. பள்ளிக் கூடத்திலே வந்து படிப்பதற்குக் கடவுளும் - மதமும் - புராணங்களும் கதைகளும் தேவையில்லையே! இங்கே வந்து அதுதான் படிக்க வேண்டுமென்றால் அப்பறம் என்ன? அக்கறைப்படணும்.
வாசக சாலைகளுக்குச் சென்று படித்தால் புத்திவரும் என்பது எப்படி அடிப்படைத் தத்துவமோ அதுபோல மனிதனுக்குக் கொஞ்சம் நஞ்சம் அறிவு இருந்தாலும் - மனிதன் மடையனாக - அயோக்கியனாக - காட்டுமிராண்டியாக எவை எவை தேவையோ அவைகள் எல்லாம் சந்து பொந்துகள் எங்கும் (அனைத்திலும்) இருக்கக் காண்கின்றோம். இவைதான் இந்தக் கோயில்கள் ஆகும். இயற்கையின் மனிதன் அறிவு பெற்று விட்டால் என்ன செய்வது என்று அப்படி அறிவு ஏற்படாத வண்ணம் அவற்றிற்கான சாதனங்களாக ஏற்படுத்தப்பட்டவைகள்தான் இந்தக் கோவில்கள்!
- [பெரியார், விடுதலை 01.10.1960]

அட முட்டாள்களா! உங்கள் தமிழை பார்ப்பான் நீசமொழி என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் சாஸ்திரங்களில் எழுதிவைத்து, சாமிகள் இருக்குமிடத்தில் புகாமல் விரட்டி அடித்ததோடு மாத்திரமில்லாமல் உன்னையும் உள்ளே புகவிடாமல் தீண்டத்தகாதவான வைத்திருக்கிறானே?
இதற்கு நீ என்றாவது வெட்கப்பட்டாயா? உங்களப்பன் வெட்கப்பட்டாரா? அவனை விட்டு விட்டு என்னிடம் வந்து மோதிக்கொள்கிறாயே? இதற்கு அறிவில்லை என்று பெயரா? மானமில்லை என்று பெயரா?
“நீ யாருக்கு பிறந்தவன்?” என்று என்னைக் கேட்கிறாய்; நான் கேட்கிறேன், உன் தமிழையும், உன்னையும் உள்ளே விடாமல் இரண்டையும் வெளியில் நிறுத்தி கும்பிடு போடும்படி பார்ப்பான் செய்கிறான். நீயும் அதற்கேற்ப அடங்கி ஒடுங்கி நின்று குனிந்து கும்பிடுகிறாயே? மடையா! மானங்கெட்டவனே! நீ யாருக்குப் பிறந்தவன் என்று கேட்கிறேன். - பெரியார்

நம் நாட்டில் ஒரு முட்டாள்தனம்! ஜனங்களிடையில் எவனாவது முழங்காலுக்கு மேலே வேட்டிகட்டினால் போதும்; அல்லது கோவணம் கட்டிக் கொண்டு உலவினால் போதும்; எந்த முட்டாள் பயல் ஆனாலும் அவன் காலில் விழுந்து அவனை மகானாகவும், மகாத்மாவாகவும் - ரிஷியாகவும் வணங்குவான்! நாமும் எல்லோரும் முட்டாள்கள் ஆனோம். -[பெரியார் , 20.10.1958]

தனக்கு வேண்டியவற்றை எல்லாம் - அதாவது இம்மையில் - இவ்வுலகில் புத்தி, செல்வம், சுகம் இன்பம், ஆயுள், கீர்த்தி முதலியவைகளும்; மறுமையில் - மேல்லோகத்தில் பாவ மன்னிப்பு, மோட்சம், நல்ல ஜென்மம் முதலியவைகளும் கிடைக்கவேண்டும் என்கின்ற ஆசையே பிரார்த்தனையின் முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. - [பெரியார், "பகுத்தறிவு" மலர் 1, 1935 ]

இன்றும் சாதாரணமாகப் பேசும் மூன்றாம் தர அறிவாளியும் கடவுள் இல்லை என்றால் நீ எப்படி பிறந்தாய்? வீடுதான் மனிதன் கட்டுகிறான். மலை சமுத்திரம் ஆறு மலையில் மரம் செடி ஆகியவைகள் எப்படி உண்டாயிற்று? இவைகட்கு ஒரு காரணம் இருக்க வேண்டுமல்லவா? என்று கூறி கடவுளை மெய்ப்பிக்க வருகிறான். -[பெரியார்,20.10.1962]

"ஜாதிப் பிரிவுக்கும் அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் இந்து மதம், மனுதர்ம சாஸ்திரம், பாரத ராமாயண புராண, இதிகாசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருஷ்ணன் முதலிய கடவுள்களும், காரணங்கள் ஆகும் என்பதை எந்த மனிதன் உணருகிறானோ அவன்தான் வருணபேதத்தை, ஜாதி பேதத்தை ஒழிக்க நினைக்கவாவது யோக்கியமுடையவனாவான்."
- பெரியார், ['குடிஅரசு'- 02.08.1933]

சுயசிந்தனைக்கு லாயக்கற்றவர்களே இந்த மாறுதல்களைக் கண்டு மிரள்வதும், "காலம் வரவரக் கெட்டுப் போச்சு" என்று கதறுவதுமாக இருப்பவர்கள். - [பெரியார்

விதி என்பது -
மிதிக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும்
கொதித்து எழாதிருக்கச் செய்யப்பட்ட சதியாகும்
- பெரியார்

துறையில், அறிவு ஆராய்ச்சித்துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது, நாம் காட்டுமிராண்களாக, பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறோம்.
நமது பொல்லாத வாய்ப்பு அயோக்கியர்களிடத்தில் பத்திரிகைகள் சிக்கிவிட்டன.
நம்மை அடிமைகளாக, அறிவற்றவர்களாக ஆக்க வேண்டுமென்று கருதுகிறவர்களிடமும், அவர்களின் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவர்களிடமும் பத்திரிகைகள் சிக்கியிருப்பதால் அவை கட்டுப்பாடாக நம் அறிவை வளரவிடாமல் செய்வதோடு, முட்டாள்தனமும், மூடநம்பிக்கையும் வளர என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் திட்டம் போட்டுச் செய்து வருகின்றனர்.
- [பெரியார், 'விடுதலை' 04.06.1968]

"பழைய புராண - இதிகாச இலக்கியக் குப்பைகளை யெல்லாம் தூக்கி வீசி எறிந்துவிட்டு புதுமையை நோக்கிச் செல்ல வேண்டும்." - பெரியார், ['விடுதலை' 06.11.1968]